search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
    • கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவேரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, 192 டி.எம்.சி. அடி நீராக இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 177.25 டி.எம்.சி. அடி அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுப்பது உபரி நீரைத்தான் தர முடியும், உரிய நீரை தரமுடியாது என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது.

    கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்கமுடியாது என்று கூறுவதும், மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வராது என்று கூறுவதும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான செயல். இப்பொழுதே தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தருவதற்காக அல்ல. எனவே, மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சினை வராது என்று க ர்நாடக முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கர்நாடக அரசின் செயல்பாடுகள் அனைத்துமே நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் செயலாகும்.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மத்திய அரசின் மூலமாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் மேலிடம் மூலமாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×