search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை
    X

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளை "தெறிக்க" விட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2½ ஆண்டுகளாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்ட விரோத பண பரிமாற்றங்கள் தொடர்பாக தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி கட்டு கட்டாக பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்து உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே சோதனை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    தமிழகத்தில் மணல் குவாரிகளில் போலியாக ரசீதுகளை தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை குறி வைத்து அமலாக்கத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது மணல் குவாரி முறைகேடு தொடர்பாக யார்-யார் தலையிட்டு பேசியுள்ளனர்? என்கிற விவாதங்களையும் அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் தகவல் தெரிவித்தனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளின் இதுபோன்ற சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் அந்த அமைப்பின் மீது மாநிலங்கள் அளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த போதிலும் அது சுதந்திரமான அமைப்பாகவே நேர்மையான முறையில் செயல்படுவதாகவே பலரும் கூறிவந்தனர்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறையின் நேர்மைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி துணை சூப்பிரண்டாக உள்ள டாக்டர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பிச் சென்றபோது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.

    ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டு கடைசியாக ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்த அதிகாரி அங்கிட் திவாரி முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தை வாங்கியபோதுதான் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    இதையடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப் போவதாக நேற்று இரவு 10 மணி அளவில் தகவல் பரவியது.

    இதனால் அங்கு ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி, போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் திரண்டனர். இரவில் எந்த நேரத்திலும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபடலாம் என்கிற தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் சாஸ்திரி பவன் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரையை போன்று சென்னை அலுவலகத்திலும் புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவிடக்கூடாதே என்கிற கலக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டு கடும் பீதியாகவே மாறியது.

    இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் தனியார் காவலர்கள் தவிக்கும் சூழலும் ஏற்பட் டது. இதையடுத்து உஷாரான அமலாக்கத்துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்காக வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது என்பது பற்றி ஆலோசித்தனர்.

    இதையடுத்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரை நுழைவு வாயிலில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி மத்திய பாதுகாப்புப் படையினர் சாஸ்திரி பவன் வளாகத்துக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் விரைந்து வந்தனர்.

    தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக நின்ற இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை ஏற்றுக்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாஸ்திரி பவன் நுழைவு வாயிலில் உள்ள கதவும் உள்பக்கமாக இழுத்து பூட்டப்பட்டது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவே இல்லை.

    மதுரையை தொடர்ந்து சென்னையிலும் சோதனை நடத்தப்போவதாக வெளியான தகவலால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகளை தெறிக்க விட்டுள்ளனர் என்றே கூறலாம். நேற்று இரவு போடப்பட்ட மத்திய படை பாதுகாப்பு இன்று காலையிலும் நீடித்து வருகிறது.

    சாஸ்திரி பவன் வளாகத்தில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இன்று காலையிலும் சாஸ்திரி பவன் வளாகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    Next Story
    ×