என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வடகிழக்கு பருவமழை நாளை விடைபெறுகிறது
- வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
- வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.
சென்னை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒரு சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து நாளை (12-ந்தேதி) விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரம் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






