என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை பழங்குடியின மக்கள் பட்டாசு வெடித்தும், ஊர்வலமாக சென்றும் கொண்டாடினர்.
திரவுபதி முர்மு வெற்றியை கொண்டாடிய நீலகிரி பழங்குடியின மக்கள்
- வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அரவேணு:
இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றார்.
வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பழங்குடியின மக்களும் தங்கள் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரிக்க போவதால் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின கோத்தர் இன மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் காமராஜர் சதுக்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலமானது நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு சென்றது.
அங்கு பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர்.
மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள் மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின், பழங்குடியின வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு கிடைத்த வெற்றி எங்கள் பழங்குடியின மக்களின் வெற்றி எனவும் அவர்கள் கூறினர்.
இதில் நீலகிரி வனவாசி கேந்திர தலைவர் ராஜன், நீலகிரி ஆதிவாசிகள் நலசங்க நிர்வாகி புஷ்பகுமார், புது கோத்தகிரி ஊர்த்தலைவர் சுப்பிரமணி, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் இட்டக்கல் போஜராஜன், அம்பிகை கணேசன், அன்பரசன், ஹால்தொரை , உதயகுமார், முட்டை கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






