search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
    X

    துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

    • கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
    • இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார், கடந்த மே மாதம் 19-ந் தேதி, புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சேலம் சன்னியாசிகுண்டு மணல்காரர் தெருவை சேர்ந்த நவீன் என்கிற நவீன்சக்கரவர்த்தி (வயது 25), செவ்வாய்ப்பேட்டை ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் என்பவரும் கைதானார். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர்.

    கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ போலீசார் நவீன்சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் நவீன் சக்கரவர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3-ம் ஆண்டும், சஞ்சய் பிரகாஷ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

    கபிலர் என்கிற கபிலன் ஜாமீனில் வந்து தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×