search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பீகார் சம்பவத்தில் தொடர்பா?: மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய போலீஸ் கிளப் முன்பு உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

    பீகார் சம்பவத்தில் தொடர்பா?: மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

    • முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மதுரை:

    மதுரையில் இஸ்லாமிய இளைஞரிடம் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்

    தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள காஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜூதீன் (வயது 26) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சந்தேகத்தின்பேரில் அழைத்து சென்று போலீஸ் கிளப்பில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜூதீனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    2 மணிநேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாஜூதீன் யார், யாரிடம் அடிக்கடி பேசி உள்ளார் என்ற விபரத்தையும் சேகரிக்க திட்டமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் தாஜூதீனிடம் விசாரனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக முகமது தாஜூதீன் கூறியதாவது:-

    நான் பீகாருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி எனது செல்போன், சிம் கார்டை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×