என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
நீட் தேர்வு தொடங்கியது: மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்
- நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர்.
- இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
சென்னை:
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. 497 நகரங்களில் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, உள்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 59 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். காலையிலேயே பெற்றோருடன் மாணவர்கள் மையங்களின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். காலை 11.40 மணி முதல் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ரமேஷ் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகள் கீர்த்தனா. பெரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். 488 மதிப்பெண் பெற்ற கீர்த்தனாவுக்கு சிறிய வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பது கனவு. அரசு பள்ளியில் இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வு எழுதுவதற்காக கீழ்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள போல சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்த அவரை வாழ்த்தி அவரது தாய் வழியனுப்பினார்.
திரு.வி.க. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவரது மகள் சாருமதி நீட் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு மைய வாசலில் மகளை வாழ்த்தி வழியனுப்பினார்.
கொடுங்கையூரை சேர்ந்த அம்பி குமார், உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் விஜய், ஹரிஹரன் ஆகியோர் இந்த வருடம் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
மகன்களின் எதிர்கால ஆசை மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான். எனவே அவர்கள் இருவரையும் நன்கு படிக்க வைத்து இன்று இருவரும் நீட் தேர்வு எழுத செல்ல அவரும் அவரது மனைவி சரஸ்வதியும் வாழ்த்தி அனுப்பினார்கள்.








