search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் - வேலூரில் பரபரப்பு
    X

    வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் - வேலூரில் பரபரப்பு

    • குடியாத்தம் அருகே இரவு வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது.
    • இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமம் மோர்தானா கால்வாய் அருகே நேற்று இரவு 7 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே வந்து பார்த்தனர்.

    அதில் பாராசூட் போன்ற ஒரு பொருளும், அதன் அருகிலேயே சிக்னல் அடித்துக் கொண்டு சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததைக் கண்டனர். இதனால் கிராம மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரித்தனர். வானத்தில் இருந்து கீழே விழுந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அதிலிருந்து சிக்னல்கள் வந்தபடி இருந்த சிறிய அளவிலான பாக்சில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என முகவரி இருந்தது. மேலும் அதில் போன் நம்பரும் இருந்தது. போலீசார் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்டபோது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என தெரிய வந்தது.

    அந்தப் பெட்டி பல்வேறு பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை போலீசார் பத்திரமாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    வானிலிருந்து மர்ம பொருள் விழுந்ததால் குடியாத்தம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×