search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லவன் இல்லத்தில் காட்சித்திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை- உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மாநகர பஸ்கள், பஸ் நிலையங்களில் 2330 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
    • பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும்.

    சென்னை:

    பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவியுடன் மாநிலங்களில் 'நிர்பயா' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 2 கட்டமாக பொருத்தப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக 500 பஸ்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2-ம் கட்டமாக ரு.72.25 கோடி ரூபாய் செலவில் 2500 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்தன. அதனுடன் பணிமனைகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 66 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன.

    அதில் இதுவரை 1830 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் நிலையங்கள், பணிமனைகள் என மொத்தம் 63 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளது.

    ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட 500 பஸ்களுடன் சேர்த்து இதுவரை 2330 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் தலா ஒரு வீடியோ ரெக்கார்டர், 3 கண்காணிப்பு கேமராக்கள், 4 அவசரகால பொத்தான்கள், ஒலிப்பெருக்கி ஆகியவையும் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த பஸ்சில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பாட்டால் அவசரகால பொத்தானை அழுத்த வேண்டும். அப்போது 'தானியங்கி வீடியோ ரெக்கார்டர்' 1 நிமிட வீடியோவை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

    அதேநேரத்தில் பஸ்சில் உள்ள ஒலிப்பான் ஒலிக்கும். அதன்மூலம் பஸ் டிரைவர் பஸ்சை எச்சரிக்கையுடன் நிறுத்தலாம். குற்றவாளிகளை கண்டக்டர் கண்டறியலாம். அதேநேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளிக்கப்படும். அதன்மூலம் பஸ்சில் உள்ள ஜி.பி.எஸ். வசதியால் பஸ்சின் இருப்பிடத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பஸ்களில் இருந்து பெரும் புகார்களை கண்காணிப்பதற்காக சென்னை பல்லவன் இல்லத்தில் 40 அடி நீளம், 7 அடி உயரம் உள்ள காட்சித் திரையுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு பங்கேற்றனர்.

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 16 கணினி இயக்குவோர் பணி புரிகின்றனர். இதன் செயல்பாடுகள், நேற்று முதல் தொடங்கின.

    Next Story
    ×