என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1024 கனஅடியாக குறைந்தது
- மேட்டூர் அணை மூலம் டெல்டாவில் 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
- அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம் பாளமாக உடைந்து காணப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் திட்டம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதுதவிர அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை மூலம் டெல்டாவில் 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவேற்றி வரும் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவும், மழை இல்லாததால் தண்ணீர் வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை வெளியே முழுமையாக தெரிகிறது.
மேலும் அணை குட்டை போல் மாறியது. அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம் பாளமாக உடைந்து காணப்படுகிறது. மேலும் கால்நடைகள் மேய்ச்சல் பகுதியாக நீர்தேக்க பகுதிகள் மாறிவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 17-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரும் குறைய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.78 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1024 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 19.60 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 13.6 டி.எம்.சி. தண்ணீரே திறக்கப்படும். மீதி உள்ள 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும். தற்போது திறந்து விடப்படும் 10 ஆயிரம் கனஅடியே தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 13 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.






