என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 99.64 அடியாக சரிந்தது
- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து ஏற்ற, இறக்கமாக இருக்கிறது.
- வினாடிக்கு 547 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் நேற்று வரை தொடர்ந்து 339 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்தது. இதற்கு முன்பு 2005-2006-ம் ஆண்டு அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கு மேல் நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 12-ந் தேதி அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 10ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 406 கனஅடியாக இருந்து நீர்வரத்து, நேற்று காலை 651 கனஅடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 547 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று காலை நீர்மட்டம் 100.29 அடியாக இருந்தது. பின்னர் நேற்றிரவு அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 99.64 அடியாக சரிந்தது.






