என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 37 நாட்களில் 30 அடி குறைந்தது
    X

    டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 37 நாட்களில் 30 அடி குறைந்தது

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.
    • கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அணையில் குறுவை சாகுபடிக்காக கடந்த மாதம் 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை இன்னும் சரிவர பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.94 அடியாக குறைந்தது.

    அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை திறக்கப்பட்ட நாளில் 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 37 நாட்களில் 31 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் வலதுகரை மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் காவிரி டெல்டா பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Next Story
    ×