என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்தது- வெளியே தெரியும் நந்தி சிலை
- நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.96 அடியாகவும் நீர்இருப்பு 32.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது அதன் நீர்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் வெளியே தெரியும்.
அதன்படி கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.
இந்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.






