என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு 80 அடிக்கும் கீழ் சரிவு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு 80 அடிக்கும் கீழ் சரிவு

    • மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    • நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஜூன் 12-ந்தேதி 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.

    பின்னர் பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு குறைத்தும் அதிகரித்தும் திறந்து விடப்பட்டு வந்தது. அதன்படி நீர் திறப்பு கடந்த 2-ந்தேதி 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் 7-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக 200 கன அடிக்கும் கீழ் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலையில் 198 கன அடியில் இருந்து நீர்வரத்து இன்று காலையில் 161 கன அடியாக சரிந்துள்ளது.

    நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் தினமும் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. நேற்று 80.29 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 79.40 அடியாக சரிந்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 41.36 டி.எம்.சி.யாக உள்ளது.

    Next Story
    ×