search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வந்துட்டான்யா புது வைரஸ் எக்ஸ்பிபி.1.16- ரொம்ப சாது எதுவும் செய்யாதுன்னு மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
    X

    வந்துட்டான்யா புது வைரஸ் எக்ஸ்பிபி.1.16- "ரொம்ப சாது எதுவும் செய்யாது"ன்னு மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

    • எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
    • காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. முதலில் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லாமலே இருந்தது.

    கொரோனா வைரஸ் முதலில் 2019 சி.ஓ.வி. என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது. பிறகு அதன் பெயரை 2019 சி.ஓ.பி.-2 என்று சொன்னார்கள். ஐ.நா. சபை ஆய்வு செய்து அதற்கு கோவிட்-19 என்று பெயர் சூட்டியது.

    பெயர் என்ன என்று தெரியாத நிலையிலேயே அந்த வைரஸ் நிறைய பேர் உயிரை பறித்தது. அதுபற்றி ஆய்வு செய்தபோதுதான் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    பொதுவாக ஒரு உயிரினம் தனது மரபணுவை பிரதி எடுக்கும்போது சில தவறுகள் ஏற்பட்டு விடுவது உண்டு. அதன் காரணமாக புதிய தோற்றம் உருவாகும். அந்த வகையில்தான் கொரோனா வைரசும் புதுசு புதுசாக மாற்றம் அடைந்தது.

    இதன் காரணமாகவே உலக அளவில் கொரோனா முதல் அலை, 2-வது அலை என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் மாற்றத்தை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது பீட்டா, காமா என்ற வகைக்கு சென்றிருப்பதாக கண்டறிந்தனர்.

    அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து உருவாக்கிய நிலையில் அது டெல்டா என்ற புதிய வடிவத்தை பெற்றிருந்தது. சில மாதங்களிலேயே அது டெல்டா பிளஸ் என்ற கொடூர வைரசாக மாறியது. டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானாவர்கள் உயிரை பறிகொடுக்க நேரிட்டது. இந்த நிலையில்தான் டெல்டாவும், டெல்டா பிளசும் ஒருங்கிணைந்து புதிதாக ஒரு கொரோனா வைரசை உருவாக்கின. அதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டது. ஒமைக்ரானில் எடுத்த எடுப்பிலேயே பி.ஏ.1, பி.ஏ.2 என்றெல்லாம் வகை வகையாக கொரோனா வைரஸ்கள் வகைப்படுத்தப்பட்டன.

    கடந்த ஓராண்டுகளில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் அடிக்கடி புதிய புதிய வகைக்கு மாறியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் மூலம் 1900 தடவை மாற்றங்கள் ஏற்பட்டு புதுசு புதுசாக வைரஸ்கள் தோன்றியதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.

    இந்நிலையில்தான் தற்போது எச்.3, என்.2 என்ற வைரஸ் பேசப்படும் ஒரு வைரசாக மாறி இருக்கிறது. இதுவும் ஒமைக்ரான் பெத்து போட்ட பிள்ளையாக இருக்குமோ என்று முதலில் பெரும் பாலானவர்கள் நினைத்தனர்.

    ஆனால் அது ஒமைக்ரான் வழி தோன்றல் வைரஸ் அல்ல. இன்புளுயன்சா வகை வைரஸ்களில் ஒன்று என்பது உறுதியானது. இந்த வைரசால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதுதான் ஆறுதலான விஷயம். ஆனால் காய்ச்சல், இருமல், சளி தொல்லை என்று சுமார் ஒரு மாதம் படாதபாடு படுத்திவிடும்.

    இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் இந்த எச்.3 என்.2 வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு 99 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில் இந்த வைரஸ் வந்து மக்களை புது விதமாக படாதபாடு படுத்திவிட்டது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ்கள் பரவி இருப்பதை கண்டறிந்தனர். எச்.1 என்.1 மற்றும் அடினோ என்ற பெயர்களிலும் வைரஸ்கள் பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதில் வட மாநிலங்களில் எச்.3 என்.2 வைரசும், தமிழகத்தில் எச்.1 என்.1 வைரசும் அதிகளவில் பரவி இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே உள்ள ஒமைக்ரான் வைரஸ் பிரிவுகளின் தாக்கத்தோடு இன்புளுயன்சா வைரஸ்களின் தாக்கமும் சேர்ந்தால்தான் பெரும் பாலானவர்களுக்கு காய்ச்சல், இருமல் தொல்லை ஏற்பட்டது.

    இதற்கிடையே நிறைய பேருக்கு என்ன வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக ஒமைக்ரான் மரபணு மாற்றத்துக்குள்ளான வைரஸ்களின் மரபணுக்கள் மீண்டும் ஆய்வு செய்யப் பட்டன.

    அந்த பகுப்பாய்வில் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரஸ் தொற்றுதான் சமீப காலமாக நிறைய பேரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் எக்ஸ்.பி.பி. வைரசின் மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அவை எக்ஸ்.பி.பி.1 மற்றும் எக்ஸ்.பி.பி. 1.16 என்றும் உருமாற்றம் பெற்றுவிட்டன.

    கடைசியாக கண்டறியப் பட்ட எக்ஸ்.பி.பி.1.16 ரகத்துக்கு சமீபத்தில்தான் பெயர் சூட்டப்பட்டது. இது சற்று வேகமாக பரவக்கூடியது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எக்ஸ்.பி.பி.1.16 வகை வைரஸ்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவுவதாக மத்திய அரசின் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இந்த வைரஸ்கள் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதனால்தான் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை அறிவுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணிவதை முக்கிய தடுப்பாக சொல்கிறார்கள். நிறைய பேர் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல் இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால்தான் புதிய வைரசை விரட்ட முடியும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×