search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தர் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு முதல் இந்திய பெண் ஆசிரியர் பெயரை மாயாவதி சூட்டினார்
    X

    புத்தர் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு முதல் இந்திய பெண் ஆசிரியர் பெயரை மாயாவதி சூட்டினார்

    • இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், கவிஞராகவும் விளங்கியவர்.
    • 1848-ம் ஆண்டு சாவித்திரி பாய் தன் கணவரின் துணையோடு ஆசிரியர் பயிற்சி பெற்று புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் தலைமையாசிரியராக பணியாற்றினார்.

    பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பெண்களுக்கு கல்வி வழங்கிய கல்வித் தாயுமான சாவித்ரிபாய் புலே ஆவார். அவரது பெயரை பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தம்பதியரின் பெண் குழந்தைக்கு பௌத்தர்களின் புனித நாளான புத்த பூர்ணிமா தினத்தில் சாவித்திரிபாய் என்று பெயர் சூட்டினார்.

    இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், கவிஞராகவும் விளங்கியவர். 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் பிறந்த இவர் பாபாசாஹேப் அம்பேத் கர் சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட மிக முக்கிய காரணமாக இருந்த மகாத்மா ஜோதிராவ் புலேவின் மனைவியாவார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவுக்கு அருகிலுள்ள பிடெவாடாவில் 1848-ம் ஆண்டு தன் கணவரோடு சேர்ந்து நிறுவியவர்.

    1848-ம் ஆண்டு சாவித்திரி பாய் தன் கணவரின் துணையோடு ஆசிரியர் பயிற்சி பெற்று புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் தலைமையாசிரியராக பணியாற்றினார். சாவித்திரி பாய் மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதியவாதிகள் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதை கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், சாணத்தையும், அழுகிய காய்கறிகளையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். இதனால் அவர், தினமும் பள்ளி செல்லும் போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்ற பின் மாற்று சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் அவர் கல்வி பணியாற்றினார். சாவித்திரிபாயின் தொடர் கல்விப்பணியால் இவர் நடத்தும் பள்ளிகளில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயின்றனர். மேலும் இவரும் இவரது கணவரும் விடாமுயற்சியுடன் 18 பள்ளிகளை நிறுவினர்.

    விதவை திருமணங்களை ஆதரித்த இவர் விதவை பெண்களின் தலையை மொட்டையடிப்பதை கண்டித்து நாவிதர்களைத் திரட்டி, 1863 -ம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். 1870 -ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்காக உறைவிட பள்ளியை நடத்தினார். பெண் சிசுகொலைகளை கடுமையாக எதிர்த்தார். மகிளா சேவா மணடலத்தை நிறுவி பெண்களுக்காக தொடர்ந்து பணியாற்றினார்.

    இவர் காவியா புலே, பவன் காசி சுபோத் ரத்னாகர் என்னும் நூல்களை எழுதியுள்ளார். Go, Get education என்னும் கவிதையை கல்வியை நோக்கி அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் எழுதியுள்ளார். சமூகம், பெண்ணியம், கல்வி என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பெண்போராளியாக இந்திய வரலாற்றில் முதன்மையான இடத்தை பிடித்த இவர் தனது 66- வது வயதில் காலமானார். புனேவில் இவரது நினைவாக மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. புனே மாநகராட்சி 1983 - ம் ஆண்டு இவரது நினைவகத்தை புனேவில் நிறுவியது. 1998 -ம் ஆண்டு இந்திய அரசு இவரது அஞ்சல் தலையை வெளியிட்டது. 2015-ம் ஆண்டு 411 ஏக்கர் பரப்பளவுள்ள புனே பல்கலைக்கழகம் சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் என்று பெயர்மாற்றம் செய்யப் பட்டது. 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அவரது 188-வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக தேடு பொறியில் அவரது படத்தை வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி யில் முதல் - அமைச்சராக இருந்த பெஹன்ஜி மாயாவதி சாவித்திரிபாய் புலே சிக்க்ஷா மதாத் யோஜனா திட்டத்தின் கீழ் 6,86,953 10 - ம் வகுப்பு மாணவிகளுக்கு மிதி வண்டியும் உதவித்தொகையாக 15000 ரூபாயும் வழங்கினார். மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூபாய் 10000 வழங்கினார் என்பது குறிப் பிடத்தக்கது. பெயர் சூட்டு விழாவில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தின் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×