search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாசி மகம்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
    X

    கடலூர் சில்வர் பீச்சில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்களை காணலாம்.

    மாசி மகம்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

    • மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
    • கடலூர் பீச்ரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு போன்ற இடங்களில் காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.

    மாசி மகத்தையொட்டி கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், கடலூர் பீச்ரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு போன்ற இடங்களில் காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பொதுமக்கள் புனித நீராடும்போது, ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க, கடற்கரையோரம் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×