search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்கழி பஜனை தொடக்கம்: ஆண்டாள், நாரதர் வேடமணிந்து திருப்பாவை- திருவெம்பாவை பாடி வலம் வந்த பக்தர்கள்

    • மார்கழியில் அதிகாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது உடல் நலம் மேம்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    • கிராமங்களில் பஜனை பாடல்கள் மற்றும் இசைச்கருவிகள் இசைப்பதற்காக வரும் சிறுவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல் வழங்குவார்கள்.

    சென்னை:

    மார்கழி மாதம் என்பது இறைவன் விழித்தெழும் சமயத்தில் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்ய தயாராகும் காலமாகும்.

    அந்த சமயத்தில் இறைவனை நாம் புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனமகிழ்ந்து நமது பிரச்சினைகள், நோய்களை நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதீகம்.

    மார்கழியில் அதிகாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது உடல் நலம் மேம்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் கோவில் மாட வீதிகளை வலம் வருவார்கள்.

    இந்த பண்பாட்டு மரபு தமிழ்நாடு முழுவதும் காலம், காலமாக நடத்தப்பட்டு வருகிறது. மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் நீராடி திருநீறு பூசி நடுங்கிக்கொண்டே பஜனை பாடல்களை பாடிக் கொண்டே செல்வார்கள்.

    கிராமங்களில் பஜனை பாடல்கள் மற்றும் இசைச்கருவிகள் இசைப்பதற்காக வரும் சிறுவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல் வழங்குவார்கள். எனவே மார்கழி மாதம் பஜனை பாடல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.

    மார்கழி 30 நாட்களும் ஆற்றில் நீராடி இறைவனை வழிபட வேண்டும் என்ப தற்காகவே ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் திருப்பாவை பாடினார். அதுபோல சிவபெருமானை பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார். இந்த பாடல்களை பிரதிபலிக்கும் வகையில் மயிலாப்பூரில் மார்கழி முதல் நாளான இன்று அதிகாலை குளிரை பொருட்படுத்தாது குழந்தைகள் ஆண்டாள், நாரதர் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து ரத வீதிகளில் இசை வாத்தியங்களுடன் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதை யொட்டி இன்று அதிகாலையிலேயே கபாலீஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி, கொரட்டூர், பாடி சிவன் கோவில், நங்கநல்லூர் மேற்குமாம்பலம் உள்பட தமிழகம் முழுவதும் பஜனை பாடல்கள் எதிரொலித்தது.

    இந்த மாதம் முழுவதும் பெரியோர் முதல் சிறியோர் வரை பங்கேற்கும் பஜனை உலா நடைபெறும்.

    Next Story
    ×