search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் விரக்தி- ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு
    X

    மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காததால் விரக்தி- ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

    • வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.
    • தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    சென்னை:

    சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். 48 வயதான இவர் தனது மகனுக்காக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

    இவரது வீடு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் அங்குள்ள வருவாய் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்து முறையிட்டுள்ளார்.

    ஆனால் மலைக்குறவன் இனத்தை சேர்ந்த வேல் முருகனுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தி இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் வேல்முருகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐகோர்ட்டுக்கு சென்று உயிரை மாய்த்துக்கொள்ள அவர் திட்டமிட்டார்.

    இதன்படி நேற்று மாலை அவர் ஐகோர்ட்டு வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகே சென்றார்.

    மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி வேல்முருகன் திடீரென தீக்குளித்தார். தீயில் எரிந்த நிலையில் ஐகோர்ட்டு வளாகத்துக்குள் ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் தீயில் கருகிய வேல் முருகனை காப்பாற்ற முயன்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரனுக்கும் காயம் ஏற்பட்டது. தீக்குளிப்பு சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    இதை தொடர்ந்து படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று காலை 6 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேல்முருகன் சாதி சான்றிதழுக்காக யார் யாரையெல்லாம் சந்தித்து பேசி உள்ளார்? எதற்காக சாதி சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தினாலேயே தீக்குளித்தேன் என்று அவர் கூறுவது பதிவாகி இருக்கிறது.

    தீயில் கருகிய நிலையில் வேல்முருகன் அளித்துள்ள இந்த வாக்குமூலம் கண்களை குளமாக்குகிறது.

    Next Story
    ×