search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம்
    X

    உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம்

    • தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.
    • புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7-வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48) என்ப வர் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

    இதற்கிடையே நாலு மாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 2021-ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத் தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி (43). இவர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பை பையும், மதுபாட்டில்களும் அன்ன லெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்-அப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×