search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பராமரிப்பு பணி- பழனியில் ரோப் கார் சேவை இல்லாததால் பக்தர்கள் தவிப்பு
    X

    பராமரிப்பு பணி- பழனியில் ரோப் கார் சேவை இல்லாததால் பக்தர்கள் தவிப்பு

    • 3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப் கார் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஒரு பெட்டியில் 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். எடையை பொருத்து நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பெட்டி பாறையில் உரசி சேதமானது. அதிக பாரம் ஏற்றியதால் ரோப் கார் பாறையில் உரசியது தெரிய வந்தது. இதனால் பராமரிப்பு பணிக்காக நேற்று ரோப் கார் நிறுத்தப்பட்டது.

    விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்திருந்தனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சில பக்தர்கள் படிப்பாதை வழியாக ஏறிச் சென்றனர். ரோப் காரில் ஏற்கனவே பழைய பெட்டிகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீண்டும் பொருத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும் ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×