search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது
    X

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லாரிகள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது

    • அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    சென்னை:

    சென்னை மற்றும் சுற்று வட்டார மோட்டார் வாகன சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கி உள்ளது.

    அனைத்து டேங்கர், மினிவேன் மற்றும் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பல வருடங்களாக முறைகேடாக வசூலிக்கும் ஒளிரும் பட்டைகளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கு துறைமுகம், வடசென்னை, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கூடிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுமார் 1 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரிகள் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் லாரி உரிமையாளர்கள் மணலி, ஆண்டாள்குப்பம் ஜங்சனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயக்குமார், கரிகாலன், யுவராஜ், மூர்த்தி ஆகியோர் தலைமையில் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். லாரிகளுக்கு பார்க்கிங் டெர்மினர் அமைத்து தர வேண்டும். 40 சதவீத காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

    Next Story
    ×