search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் கல்லூரி அருகே நடமாட்டம்- கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலி
    X

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான சிறுத்தை புலியின் படம்

    தனியார் கல்லூரி அருகே நடமாட்டம்- கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலி

    • வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
    • வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலியின் படம் பதிவாகி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூரியாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை, பரமத்திவேலூர் கொங்கு பள்ளி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள் மற்றும் மயில்கள், கோழிகளை கடந்த மாதம் 31-ந் தேதியிலிருந்து தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக சிறுத்தை புலி வேட்டையாடி வருகிறது.

    இதையடுத்து, மாவட்ட வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில நேரத்தில் ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். முதுமலை, தேனி மற்றும் கோவை பகுதியில் இருந்து வந்துள்ள வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    செஞ்சுடையாம்பாளையம் அருகே உள்ள புலிகரடு, அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள குவாரியின் அடர்ந்த பகுதியில் சிறுத்தை புலி பதுங்கி இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. சிறுத்தை புலி பகல் நேரங்களில் வெளியில் வருவதில்லை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து தனக்கு தேவையான இரையை தேடி செல்கிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு புளியம்பட்டி, ரங்கநாதபுரம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்த கன்று குட்டியை சிறுத்தை புலி அடித்து கொன்று சாப்பிட்டு விட்டு, மீதியை செடி கொடிகளை போட்டு மூடி வைத்து விட்டு சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதிக்குச் சென்ற சிறுத்தை புலி சண்முகம் என்பவரது தோட்டப் பகுதியில் ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று, கொன்று சாப்பிட்டு போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதனிடையே பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்னால், வில்லிபாளையம் பகுதியில் சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று மதியம் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை புலியின் கால் தடம் உள்ளதா என்று ஆய்வு நடத்தினர்.

    இதனிடையே வனத்துறையினர் வைத்துள்ள கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலியின் படம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×