search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகனின் மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் கூலித்தொழிலாளி

    • மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்து இருதயத்தில் ஓட்டை இருந்ததாக கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
    • தமிழக அரசு தங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு சரவணன் (வயது 14), சக்திவேல் (வயது 12), ஆகிய 2 மகன்களும், முத்துமாரி (வயது 8) என்ற ஒரு மகளும் உள்ளனர். முருகன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், இவரது மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்து இருதயத்தில் ஓட்டை இருந்ததாக கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சரவணனுக்கு மாற்று இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக பல லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், கூலி தொழிலாளியான முருகன் தனது மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்.

    2010-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து தனது வருமானத்திற்கும் மீறி இதுவரை சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் தற்போது மாதம் ரூ.6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை மருத்துவ செலவிற்கு செலவு செய்து வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார். தனது மகனை காப்பாற்ற கோரி தமிழக அரசிற்கு அவரது குடும்பத்தினர் உருக்கத்துடன் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருதய நோயால் அவதிப்பட்டு வரும் தனது மகன் மூச்சுத்திணறல் காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்றும், தற்போது மாற்று இருதயம் அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது என்றும் மேல் சிகிச்சை செய்வதற்கு போதிய வசதி இல்லாததால், தமிழக அரசு தங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×