search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
    X

    ராக்கெட் ஏவுதளம் அமைவதை காட்டும் வரைபடம்.

    தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

    • திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
    • ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது.

    தூத்துக்குடி:

    விண்வெளி துறையில் இந்தியா வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது.

    ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்தி ஆய்வு மேற்கொள்வதிலும், புதிய வசதிகளை பெறுவதிலும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வரும் ஆண்டுகளில் இஸ்ரோ திட்டமிடும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மற்றொரு ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம், குலசேகரன்பட்டினத்தில் இயற்கையாகவே விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழல் இருந்தது தான்.

    ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற இடம் நிலநடுக்கோடு பகுதி ஆகும். இந்த பகுதியில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதால், ராக்கெட்டின் முழு ஆற்றலையும் பெற முடியும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    ஸ்ரீஹரிகோட்டா நிலநடுக்கோடு பகுதியில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. தொலையுணர்வு செயற்கை கோள்களை தெற்கு நோக்கியும், தொலை தொடர்பு செயற்கை கோள்கள் கிழக்கு நோக்கியும் ஏவப்படுகின்றன. இங்கிருந்து ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளும் 104 டிகிரி கோணத்தில் ஏவப்படுகிறது. ஆனால் 90 டிகிரி கோணத்தில் ஏவுவதே சிறந்தது.

    குலசேகரன்பட்டினத்தில் இந்த அம்சம் இயற்கையாகவே உள்ளது. இதனால் அங்கு 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து அதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    காலி இடங்களுக்கு ஏக்கருக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வழங்கப்பட்டது. மேலும் குலசேகரன்பட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி, சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சிஆகிய கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம் தவிர, மீதம் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படடது.

    இதனை 8 பகுதியாக பிரித்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கென 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தாசில்தார் தலைமையிலும் 13 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

    தற்போது நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

    இதனையடுத்து ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் நில அளவீடு பணிகள் முடித்து தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.

    கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் படுக்கப்பத்து பகுதி எள்ளுவிளை பகுதியில் இருந்து அமராபுரம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பி வேலிகள் அமைப்பதற்காக கான்கிரீட் அமைத்து கற்கள் நடப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த தடுப்பு வேலி அமைக்கும் பணியும் முடிந்தது.

    அடுத்தகட்டபணிகளாக குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் கூடல்நகர் பகுதியில் உள்ள 37 குடியிருப்புகளுக்கு உடன்குடி ஒன்றியம் செட்டியா பத்து ஊராட்சி அய்யா நகர் பகுதியில் தனியார் நிலங்களை வாங்கி மக்களுக்கு கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், ஊராட்சி துணைத் தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து இரு இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது முழு திருப்தியாக உள்ளது. இங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை சிறப்பாக விண்ணில் செலுத்த முடியும். தெற்கு நோக்கிய ஏவுதலுக்கு சிறந்த இடமாக குலசேகரன்பட்டினம் உள்ளது.

    ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அரசிடம் இருந்து சில அனுமதியும், பாதுகாப்பு அனுமதியும் பெற வேண்டியது உள்ளது. நாங்கள் ஏவுதளம் அமைப்பதற்கு தயாராக உள்ளோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    எனவே விரைவில் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கட்டுமான பணிகள் தொடங்கினால் 2 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2024 அல்லது 2025-க்குள் பணிகள் முடிந்து ஏவுதளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் போது வேலைவாய்ப்பு பெரும், வணிக ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக இந்த ஏவுதளம் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அது தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்கின்றனர்.

    மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவை விட பூமத்திய ரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே கணிசமான எரிபொருளை சேமிக்க முடியும் என்பதால் ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. இந்தவகையில் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி சில கட்டுப்பாடுகளோடு விண்வெளியில் செலுத்த முடியும்.

    தற்போது ராக்கெட்டுக்கு தேவைப்படும் திரவ எரிபொருள், இங்கிருந்து மிக அருகில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையத்தில் இருந்து 1,497 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமையும்போது, 1000-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரிகிரியில் இருந்த நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரும் செலவு மிச்சமாகும். இதுதவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு செலுத்த முடியும்.

    பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது காற்றின் வேகம், மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும்.

    நிலையான கால சூழ்நிலை, நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டுள்ளது.

    Next Story
    ×