என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாஞ்சில் பிரசாத்
சென்னையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் மரணம்: நாளை இறுதிச்சடங்கு
- நாஞ்சில் பிரசாத் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 165-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
- இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்
சென்னை:
சென்னை மாநகராட்சி 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராகவும் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் நாஞ்சில் பிரசாத் (56). ஆதம்பாக்கம் சாந்தி காலனியில் வசித்து வந்தார். எப்போதும் சுறுசுறுப் பாக செயல்படுபவர். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் மூலமும் பிரபலமானவர்.
கடந்த 21-ந்தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அருகில் உள்ள மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உடலில் வேறு பாதிப்பு ஏதோ தெரிகிறது. உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நாஞ்சில் பிரசாத் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிறுநீரகத்தை செயல்பட வைக்க மருத்துவர்கள் போராடி இருக்கிறார்கள். அதற்குள் தொற்று இதயத்தை பாதித்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 4 மணியளவில் நாஞ்சில் பிரசாத் மரணம் அடைந்தார்.
அவரது மரணம் காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஸ்யம் தி.மு.க. சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா உள்பட காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
நாஞ்சில் பிரசாத் உடலுக்கு நாளை (வெள்ளி) காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடக்கிறது. அதன் பின்னர் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. ஆதம்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
நாஞ்சில் பிரசாத்தின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம். எம்.ஏ. பட்டதாரியான இவர் வேலை நிமித்தமாக 1989-ல் சென்னை வந்தார்.
1990-ல் நாஞ்சில் பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். கூடவே காங்கிரசிலும் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடு பட்டார். தொடக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்தார். ஆலந்தூர் நகராட்சி கவுன் சிலர் மற்றும் மண்டல தலை வராக பதவி வகித்தவர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் 165-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
மறைந்த நாஞ்சில் பிரசாத்துக்கு சுதா என்ற மனைவியும் காவ்யா, அனன்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் காவ்யா பட்டப் படிப்பு படித்துள்ளார். அனன்யா பிளஸ்-2 படித்து வருகிறார்.
நாஞ்சில் பிரசாத் மறைவு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆற்றல்மிக்க செயல்வீரர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் திடீரென காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமை துடிப்போடும், சிரித்த முகத்தோடும் பழகு வதற்கு இனிய பண்பாளராக விளங்கி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அயராது உழைத்தவர்.
ஆலந்தூர் தொகுதியில் உள்ள மக்களிடையே இவரது தொண்டால் பொழுதளந்த தூய்மையான சேவையின் காரணமாக அளவற்ற நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்.
காங்கிரஸ் தோழர்களுடன் மூவண்ணக் கொடியை கையில் ஏந்தி கம்பீரமாக முன்னின்று செயல்பட்ட தேசிய தளபதியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. சிலவற்றை ஈடு செய்ய முடியும். அனால் ஆற்றல் மிக்க தோழர் நாஞ்சில் பிரசாத் மறைவு ஈடு செய்யவே முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.
இதன்மூலம் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தி னருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை விட்டு பிரிந்த நாஞ்சில் பிரசாத்தின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மறைந்த தேசிய செயல்வீரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






