search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் இருந்து விலகல்- தி.மு.க.வில் இணைய திட்டமா?: கோவை செல்வராஜ் பேட்டி
    X

    அ.தி.மு.க.வில் இருந்து விலகல்- தி.மு.க.வில் இணைய திட்டமா?: கோவை செல்வராஜ் பேட்டி

    • அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான்.
    • ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

    கோவை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

    இதில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.

    இதையடுத்து அவருக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே பன்னீர்செல்வம் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தகவல் பரவி வந்தது.

    இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கோவை மாவட்டத்தை 4 ஆக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் பதவியும் பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கோவை செல்வராஜ் தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் 1972-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கட்சிக்காக கடுமையாக உழைத்து வந்தேன். கோவையில் அரங்கநாதன் என்பவர் எம்.எல்.ஏ. தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். அப்போது எதிர்கட்சிகள் என்னை தாக்கி மண்டையை உடைத்தனர்.

    இதையடுத்து அரங்கநாதன் என்னை எம்.ஜி.ஆரை சந்திக்க அழைத்து சென்றார். அப்போது எனக்கு 16 வயது. முதல் முறையாக எம்.ஜி.ஆரை சந்தித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். 1984-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட் கேட்டேன். ஆனால் அங்கு மறுக்கப்பட்டது. காங்கிரசில் சேர்ந்து எம்.எல்.ஏ. ஆனேன். அப்போது ஒருமுறை ஜெயலலிதா என்னை அழைத்து பேசினார். இதனை தொடர்ந்து நான் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தேன். தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வந்தேன்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமயில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டது. இதில் நான் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தேன். இதுவரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வந்தேன்.

    இந்தநிலையில் தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணை அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் என்ற தகவல் தெரியவந்தது. இதை கேட்டதும் தான் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    ஏனென்றால் அப்போது அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைத்திருந்தால் ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் ஜெயலலிதா உயிரை விட தங்கள் பதவியே முக்கியம் என நினைத்து செயல்பட்டுள்ளனர். இப்படிபட்டவர்களுடன் இதுவரை நான் இணைந்து பணியாற்றியதை நினைத்து வேதனை அடைந்தேன்.

    எனவே இவர்களோடு இனியும் பணியாற்ற விரும்பவில்லை. அதன் காரணமாகவே ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மட்டுமில்லை. அ.தி.மு.க.வில் இருந்தே விலகுகிறேன்.

    அ.தி.மு.க. அழிவதற்கு முக்கிய காரணமே வைத்திலிங்கம் தான். ஆனால் ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் சேர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை கொடுத்து வருகிறார்கள். ஓ.பி.எஸ் அணியில் இருந்து அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் கடந்த 2 மாதங்களாகவே எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தேன். நேற்று என்னிடம் கோவை மாநகர் மாவட்டத்திற்கு வேறு பொறுப்பாளரை நியமிக்கட்டுமா என கேட்டனர். அதற்கு நான், தாராளமாக நியமித்து கொள்ளுங்கள். எனக்கும், உங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதால் தி.மு.க.வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நான் எந்த ஒரு மதவாத கட்சியிலும், தேசிய கட்சியிலும் இணைய மாட்டேன். திராவிட பாரம்பரியத்தில் இருந்தும் விலக மாட்டேன். அப்படியே சேர்ந்தாலும் திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன். எனக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பேன் என்றார்.

    Next Story
    ×