என் மலர்
தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.
- கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்க உள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். விரைவில் விசாரணை துவங்க உள்ள நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் டி.எஸ்.பி.க்கள், 3 டி.எஸ்.பி.கள், அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை வாங்கிய பின் விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.