என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை
- சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன.
- தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது.
சென்னை:
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாமாயில், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு தமிழகத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பக்கூடிய பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
5 நிறுவங்களும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு நிறுவனம் தண்டையார்பேட்டையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 7 மொத்த விற்பனை கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பாமாயில் மற்றும் பருப்பு நிறுவனத்துக்கு சொந்தமான பெரிய குடோன் மற்றும் உரிமையாளரின் வீடு ஆகியவை உள்ளது. தண்டையார்பேட்டை சந்தியராயன் கோவில் தெருவில் நிறுவன ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. கணக்காளராக பணி புரிந்து வரும் இவரது வீட்டிலும், குடோன் மற்றும் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தி.நகர் மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. சென்னை அண்ணா சாலையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்று இன்னொரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகின்றன. சோதனை நடைபெற்று வரும் நிறுவனங்களின் பெயர் விவரங்களும் வெளியாகி உள்ளன.
இன்று காலை 6 மணியளவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருமான வரி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிவில் 5 நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும். இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






