search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க கவ் மில்க் அறிமுகம்
    X

    நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க 'கவ் மில்க்' அறிமுகம்

    • சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    • நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக அனைத்து அளவு பாக்கெட்டுகளும் தட்டுப்பாட்டில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இங்கிருந்து தினமும் கடைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளும், வீடுகளுக்கு பச்சை நிற பாக்கெட்டுகளும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக நாளை முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாக்கெட் 500 மில்லி அதிகபட்ச விலையாக ரூ.22.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது.

    தற்போது கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். ஆவினில் இருந்து லிட்டர் ரூ.33 முதல் 38 வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.40 முதல் 42 வரை கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவர்களை நாடி செல்கின்றனர். இதனால் ஆவினில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வழக்கமாக பச்சை நிற பாக்கெட்டு ஒன்று விற்பனை செய்வதன் மூலம் ஆவினுக்கு ரூ.2 நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யவே கவ் மில்க் என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம் தட்டுப்பாடு தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் பால் ஏஜெண்ட்டுகள் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பச்சை நிற பாக்கெட்டுகளில் கொழுப்பு 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை லிட்டர் ரூ.46-க்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது தட்டுப்பாட்டினால் கவ் மில்க் என்பதை 3.5 சதவீதம் கொழுப்புடன் அறிமுகப்படுத்தி லிட்டர் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோர், டீக்கடைக்காரர்கள் ஆவின் பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர். பேட் அளவு அதிகமாக இருந்தால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து டீ போட்டு கொள்ள முடியும். ஆனால் கவ் மில்க்கில் பேட் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அதில் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×