search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களுக்கான கூட்டுறவு சந்தை கைப்பேசி செயலி அறிமுகம்
    X

    மக்களுக்கான கூட்டுறவு சந்தை கைப்பேசி செயலி அறிமுகம்

    • தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றின் மூலமாக அவர்களது சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெளிச்சந்தையை விட குறைவான விலையில் பொதுமக்கள், விவசாயிகள் அவரவர் இல்லத்திலிருந்து பெற்று பயனடையும் வகையில் இக்கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தரமான பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலைகள் ஆகியவற்றின் மூலமாக அவர்களது சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இப்பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தவும், பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையிலும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே சுலபமாக பொருட்களை வாங்க ஏதுவாகவும் கூட்டுறவு கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சந்தை கைப்பேசி செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இக்கைப்பேசி செயலியின் மூலம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் 44 வகையான தரமான தயாரிப்புகளான மளிகைப்பொருட்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், உயர்தர தேன், மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொல்லிமலை காபித் தூள், சோப்பு வகைகள்.

    தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துக்கள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஆக மொத்தம் 64 கலப்படமற்ற தரமான தயாரிப்புகளை வெளிச்சந்தையை விட குறைவான விலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவரவர் இல்லத்திலிருந்து பெற்று பயனடையும் வகையில் இக்கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இப்பணியினை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மேற்கொண்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜகந்நாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் கூட்டுறவு) விஜயராணி, கூடுதல் பதிவாளர்கள் வில்வசேகரன், கே.வி.எஸ்.குமார், சுப்பிரமணியன், மிருணாளினி உள்பட கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×