search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பருவமழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை, தென்காசியில் நெல் நடவு பணிகள் தீவிரம்
    X

    பருவமழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை, தென்காசியில் நெல் நடவு பணிகள் தீவிரம்

    • பாபநாசம் அணை 97.05 அடியாக உள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவமழை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் சற்று பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 4.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை 97.05 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 360 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 66.15 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், சில நாட்களாக மழை பெய்யாததால் நீரின் அளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் இருப்பதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கி உள்ளனர். நெல் நடவு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்யவில்லை. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் மிதமாகவே இருக்கிறது.

    கடனா அணை நீர்மட்டம் 76 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.59 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×