search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு தனியார் மருத்துவமனையில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
    X

    ஈரோடு தனியார் மருத்துவமனையில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

    • கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
    • தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர். மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×