search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடைபெற்ற வருமானவரி சோதனை
    X

    வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு காரில் புறப்பட்டு சென்ற காட்சி.

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடைபெற்ற வருமானவரி சோதனை

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
    • வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்து உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 16 பேர் 6 கார்களில் வந்தனர். அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

    நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று காலை 6.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இரவு, பகலாக 20 மணி நேர விசாரணையை முடித்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது 5 பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.

    ஆனால் வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இந்த சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×