search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை... சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
    X

    மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை... சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

    • சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக காவல்துறை தரப்பில் வாதம்
    • பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாக நீதிமன்றம் கருத்து

    சென்னை:

    சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சிவசங்கர் பாபா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இன்றைய விசாரணையின்போது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யக்கூடிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கை சட்டப்படி தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ஆனால் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தாமதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலதாமதத்தை ஏற்கக் கோரி எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று கூறியதுடன், சிவசங்கர் பாபாவுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பாலியல் தொல்லை தீவிரமான குற்றமாக இருந்தாலும்கூட பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாகவும், இதற்கு வெறும் அச்சம் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். செல்வாக்கான நபர்களின் சட்டவிரோத செயல்கள் ஒருநாள் வெளியில் வரும்போது அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன்வருவது இயல்பு, அதேபோல்தான் இந்த வழக்கிலும் தாமதமாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    Next Story
    ×