search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: ஊட்டி-மஞ்சூர் சாலையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

    • கனமழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
    • மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் ஊட்டியில் வெயில் அடித்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது.

    சில நிமிடங்களில் கனமழையாக மாறி கொட்டி தீர்த்தது. இதனால் கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்பட பல முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் எல்லாம் தண்ணீரில் தத்தளித்தபடியே ஊர்ந்து சென்றன.

    ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் தேங்கியது. இதன் காரணமாக சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன.

    கனமழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையை பொருட்படுத்தாமல் சுற்றுலா தலங்களை மழையில் நனைந்தபடி பார்வையிட்டனர்.

    ஊட்டி அருகே எம்.பாலாடாவில் இருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் செல்லும் வழியில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டது.

    இதேபோல் ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திநகர் பகுதியில், 50 அடி உயரத்தில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.

    மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் போக்குவரத்து தடைபட்டதாலும், மழை பெய்து கொண்டிருந்ததால் மண் அகற்றப்படும் வரை, ஒன்றரை மணி நேரம் பஸ்சிலேயே அமர்ந்தனர்.

    நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்த மண் சகதிகளை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த பலத்த மழைக்கு சாலைகள், கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உப்படி துணை மின் நிலையத்தை மின்னல் தாக்கியது. இதனால் மோட்டார் சைக்கிள், மின் கம்பிகள் எரிந்து நாசமானது. இதன்காரணமாக மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணி நடந்தது.

    நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கீழ் கோத்தகிரி, ஊட்டி, கேத்தி, பந்தலூரில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கீழ் கோத்தகிரி-46, ஊட்டி-44.1, கேத்தி-44, பந்தலூர்-43, கொடநாடு-38, சேரங்கோடு-31, நடுவட்டம்-15.

    Next Story
    ×