என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை, நீலகிரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
    X

    கோவை, நீலகிரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

    • கோத்தகிரி, கொடநாடு, கீழ் கோத்தகிரி, அரவேணு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரத்திலும் சாரல் மழையும் பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வந்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவியது.

    நேற்று காலை மிதமான வெயில் அடித்தது. இரவில் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஒட்டுப்பட்டறை, வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக குன்னூர் பஸ் நிலைய சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    குன்னூர் பஸ் நிலைய பகுதி, வெலிங்டன், ஊட்டி சாலை, பிளாக் பிரிட்ஜ் பகுதிகளில் சாலை பணி நடந்து வருகிறது.

    நேற்றிரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இதேபோல் மேல்குன்னூர், ஒட்டுப்பட்டறை பகுதிகளிலும் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    கோத்தகிரி, கொடநாடு, கீழ் கோத்தகிரி, அரவேணு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    நீலகிரியில் தற்போது வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது. பனிமூட்டம் மற்றும் மேக மூட்டத்துடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். மழை பெய்வதால் கடும் குளிரும் நிலவுகிறது.

    கோவை மாநகரில் நேற்று மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போன்றே காட்சி அளித்தது. அத்துடன் குளிர்ந்த காற்றும் வீசியதால் ஒரு ரம்மியமான காலநிலை நிலவியது.

    மாலையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    நள்ளிரவில் ரெயில் நிலையம், அண்ணாசாலை, காந்திபுரம், டவுன்ஹால் உள்பட மாநகரில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக அவினாசி சாலை, திருச்சி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழைக்கு அவினாசி சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது.

    தண்ணீர் தேங்கிய தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அதிநவீன எந்திரத்தின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் லங்கா கார்னர் பாலம், வடகோவை மேம்பால பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து, வந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×