என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை: குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 10 செ.மீ. மழை
    X

    குண்டேரிப்பள்ளம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதை காணலாம்

    ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை: குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 10 செ.மீ. மழை

    • ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள், கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. ஆனால் இரவு 10 மணி முதல் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கி பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கரட்டூர் நாயக்கன்காடு, மொடச்சூர், வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் 2 மணி நேரம் இடி உடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் இன்று காலையும் வானம் மேகத்துடன் காணப்பட்டது. கோபிசெட்டிபாளையம் பகுதியில் மட்டும் 9 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் இந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளம் அணை பகுதியில் 10 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் நேற்று 2-வது முறையாக குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. குண்டேரிபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 41.75 அடியாகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரிபள்ளம் அணைக்கு வினாடிக்கு 91 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 91 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் மாவட்டத்தில் தாளவாடி, அம்மாபேட்டை, பவானி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    தொட்டகாஜனூர், பாசூர், திகினாரை, அருள்வாடி,போன்ற பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு திடீர் மழையால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டேரி பள்ளம்-100, கோபிசெட்டி பாளையம்-90.2, கொடிவேரி அணை-15.2, தாளவாடி-12.4, அம்மாபேட்டை-12.2, பவானி-6.4, வரட்டு பள்ளம்-4.8, சத்திய மங்கலம்-3.

    Next Story
    ×