search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை
    X

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டிய காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை

    • குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது.
    • ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அணை பகுதியில் லேசான மழை பெய்கிறது. நெல்லையில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டுவிட்டு லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று காலை சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் காலை வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலையிலும் 2 அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குளிக்க முடியாமல் அவர்கள் அருவிக்கரைகளில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலையில் இருந்தே அருவி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் தென்காசியில் 19 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 12 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினார் தனது முழு கொள்ளளவான 132 அடியை எட்டி நிற்கிறது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. ராமநதியில் 79 அடியும், கடனா அணையில் 77 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×