என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமரியில் இன்றும் கனமழை கொட்டியது: 5 வீடுகள் இடிந்தது
- களியல் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.36 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரவும் விட்டுவிட்டு கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
களியல் பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, கொட்டாரம், குழித்துறை, மயிலாடி, சுருளோடு, தக்கலை, குளச்சல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.36 அடியாக இருந்தது. அணைக்கு 467 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.67 அடியாக உள்ளது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. ஏற்கனவே தொடர் மழைக்கு 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவில் தலா 2 வீடுகளும், கிள்ளியூரில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7.2, பெருஞ்சாணி 21.8, சிற்றார் 1-4.8, சிற்றார் 2-42.2, பூதப்பாண்டி 10.6, களியல் 60, கன்னிமார் 4.2, கொட்டாரம் 14, குழித்துறை 8.4, மயிலாடி 10.4, நாகர்கோவில் 15.4, புத்தன் அணை 19.2, சுருளோடு 10, தக்கலை 6, குளச்சல் 11.6, இரணியல் 23, பாலமோர் 12.4, மாம்பழத்துறையாறு 10.6, ஆரல்வாய்மொழி 8.4, கோழிப்போர்விளை 17.5, அடையாமடை 19.3, முள்ளங்கினாவிளை 5.2, ஆணைக்கிடங்கு 9.2.






