search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் மீண்டும் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
    X

    தற்காலிக தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோட்டில் மீண்டும் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

    • கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்து மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், கொடிவேரி, வரட்டுப்பள்ளம், பவானி, அம்மாபேட்டை, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் மிக பலத்த மழை பெய்து. பவானியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கொடிவேரி பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் மொடக்குறிச்சி, நம்பியூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் - தட்டாம்பு தூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் 2 முறை மழைநீரில் மூழ்கி போக்குவரத்து தடைபட்டது.

    அதனை சரி செய்து மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதனால் நம்பியூரில் இருந்து சத்தி செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு சுண்டக்காம்பாளையம் வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு-பவானி செல்லும் சாலையில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் காளிங்கராயன் வலது கரையில் அமைந்துள்ள 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பி.பி.டி. ரகம் நெற்பயிர்கள் பெய்த கனமழையினால் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளன. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், பெரும்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-71, அம்மாபேட்டை-60.40, வரட்டுப்பள்ளம்-58.40, கோபி-52.20, பவானிசாகர்-42, பெருந்துறை-36, பவானி-19.20, சத்தியமங்கலம்-18, கவுந்தப்பாடி-15, ஈரோடு-9, மொடக்குறிச்சி-6.20, நம்பியூர்-6, சென்னிமலை-4.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 460 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    Next Story
    ×