என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவை, நீலகிரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
    X

    கோவை, நீலகிரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை- சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

    • ஊட்டி, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அரவேணு, கொடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும், அதிகாலை மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்பட்டது.

    பனிப்பொழிவால் விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பனிப்பொழிவுடன் உறைபனியும் கொட்டியதால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக குன்னூர் மற்றும் வண்டிச்சோலை, ஒட்டுப்பட்டரை, எடப்பள்ளி, வண்ணாரபேட்டை, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் மழை பெய்தது.

    மாலை தொடங்கிய மழையானது அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குன்னூர் பஸ் நிலைய பகுதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் கற்களும், மணலும் சேர்ந்தது, அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவியது.

    இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அரவேணு, கொடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    ஊட்டியில் காலையில் இருந்தே மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்திருந்தனர்.

    அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது. நேற்று காலை முதல் நிலை மாறி மேகமூட்டமாக காணப்பட்டது.

    மாலைக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. பாப்பநாயக்கன் பாளையம், அண்ணாசிலை, ரெயில் நிலையம், டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனையாமல் இருக்க வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஒரு சிலர் மழையில் நனைந்தபடியே வாகனங்களை இயக்கி சென்றதையும் காண முடிந்தது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதேபோல் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர், வடவள்ளி, பேரூர், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை, கருமத்தம்பட்டி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, சோமனூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×