search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது
    X

    குற்றாலம் மெயினருவியில் இன்று காலை ஆர்ச்சை தொட்டபடி விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதை காணலாம்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது

    • தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 2 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை விட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்ததால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 700 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2906 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 70.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 73.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 82 அடியாக இருந்த நிலையில், மேலும் 5 அடி உயர்ந்து இன்று 87.20 அடியாக நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 954.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணையில் 45.50 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 63 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கொடுமுடியாறு அணை பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 19 அடியாக உள்ளது. அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் 22 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையில் 12.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 48 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 41 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளை பொறுத்தவரை களக்காடு, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரத்தில் 9.60 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும், களக்காட்டில் 2.80 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 2.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. தென்காசியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி அணை பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அணை நிரம்பி 2 வாரம் ஆகும் நிலையில், அணைக்கு வரும் 18 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்த நிலையில், தொடர்மழையால் நீர் இருப்பு மேலும் 1 அடி உயர்ந்து 99 அடியானது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குறிப்பாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குறைந்தவுடன் மீண்டும் அவர்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால், அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×