search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கும் கோரிக்கை - கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கும் கோரிக்கை - கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

    • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
    • இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், கலவரத்தால் பள்ளிக்கு ரூ.25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரிசெய்வதற்காக வளாகத்திற்குள் அனு மதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரிசெய்ய அனுமதிக்காததன் மூலம் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி வளாகத்திற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை திறக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, ​​அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு அனுமதியின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும், ஒன்பது முதல் 12ம் வகுப்புகள் அருகிலுள்ள பள்ளியிலும் நடைபெற்று வருகிறது என்றார்.

    அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னாவு, இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.

    முதல்கட்டமாக பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகே பள்ளியை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×