search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் தரிசனம்
    X

    சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் தரிசனம் - கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபாடு செய்த கவர்னர் மற்றும் குடும்பத்தினர்

    சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் தரிசனம்

    • கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார்.
    • கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று அவர் பார்வையிட்டார்.

    திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விவேகானந்தர் மண்டபம் சென்று பார்வையிட்டார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, நீலகண்ட விநாயகர், மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலயன், திருவேங்கட விண்ணகர பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் தரிசனம் செய்தார். குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரெத்தின வேல் பாண்டியன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் கவர்னர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திராவுக்கு சென்றார். அங்கு அவரை கேந்திர துணைத்தலைவர் அனுமந்த ராவ், நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் ஆகியோர் வரவேற்றனர். கேந்திராவில் உள்ள பாரதமாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். அதன் பிறகு 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து விமானத்தில் அவர் சென்னை செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×