search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபான சிறப்பு உரிமம் ரத்து- அறிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
    X

    மதுபான சிறப்பு உரிமம் ரத்து- அறிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு

    • சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும்.
    • மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மது அருந்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) ஆகிய இடங்களிலும் மது அருந்தலாம் என்று அரசு புதிய அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதுகுறித்து தழிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 54 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ்நாடு மதுபானத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விளையாட்டு மைதானங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை மொத்தமாக வாங்கி பரிமாறலாம். ஒரு நாள் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுவிலக்கு (கலால்) துணை ஆணையர்களிடம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

    எப்.எல்.12 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதியை பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான மதுபாட்டில்களை டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது கலால் உதவி ஆணையரிடம் தெரிவித்தால் அவர் அருகில் உள்ள கடைகளில் இருந்து சரக்கு வாங்கிக்கொள்ள அனுமதி தருவார். இதற்காக விழா நடத்துபவர்கள் 1 வாரத்துக்கு முன்னதாகவே விண்ணப்பித்து அனுமதி வாங்கி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    வணிக வளாகங்கள் கான்பரன்ஸ் ஹால், கன்வென்ஷன் டெண்டர், திருமண மண்டபம், வரவேற்பு ஹால், விளையாட்டு மைதானம் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் 1 நாள் மது விருந்துக்கு ரூ.11 ஆயிரம் அனுமதி கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

    நகராட்சி பகுதிகளுக்கு ரூ.7,500-ம் மற்ற பகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி விழா நடத்துபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு கலால் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் மதுபானங்களை தவிர வேறு எந்த மதுபானமும் அங்கு குடிக்க அனுமதிக்க கூடாது என்றும் நிகழ்ச்சி முடிந்த பிறகு மதுபானங்கள் மீதி இருந்தால் அதை சம்பந்தப்பட்ட கலால் அதிகாரிகளிடம் ஒப்படைத்து கணக்கை நேர் செய்துவிட வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள், மே தினம், திருவள்ளுவர் நாள், நபிகள் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் மது குடிக்க அனுமதி கிடையாது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், அறிவிக்கயைில் சில திருத்தம் செய்து தமிழிக அரசு அறிவித்துள்ளது.

    அதில், வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×