என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதுப்பேட்டையில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது- 3 பேர் தப்பி ஓட்டம்
- புதுப்பேட்டையில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
சென்னை:
சென்னையில் ரவுடிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்து பிளாட்பாரத்திலும், சாலையிலும் கத்தியை உரசி செல்லும் வீடியோ அவ்வப்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பொதுமக்களை இதுபோல் பயமுறுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் அருகேயுள்ள புதுப்பேட்டையில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் புதுப்பேட்டை பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஆயுதங்களுடன் 4 பேர் போலீசில் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். மீதி 3 பேர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.






