search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டலில் உணவு விலையும் உயர்கிறது- விலைவாசி உயர்வால் செலவுகள் அதிகரிப்பு
    X

    ஓட்டலில் உணவு விலையும் உயர்கிறது- விலைவாசி உயர்வால் செலவுகள் அதிகரிப்பு

    • கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம்.
    • நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    காய்கறி விலை... மளிகை பொருட்களின் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதால் சமையல் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவைப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

    விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவு ஆகிறது என்று கூறும் அவர்கள் மாதத்துக்கு 2500 ரூபாய் வரை சமையல் செலவு அதிகரித்து இருப்பதால் இது பெரும் சுமை என்றே தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இருப்பது போன்ற நிலை தான் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது.

    கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். தற்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது. காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் தற்போது பொதுமக்களின் தலையில் விலை உயர்வை சுமத்த நாங்கள் தயாராக இல்லை. விலைவாசி குறையுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அப்போதுதான் ஓட்டல் தொழிலை நாங்கள் நடத்த முடியும். இல்லையென்றால் பல ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டலை மூடிவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது போன்ற விலை உயர்வு காரணமாக 100 சதவீதம் அளவுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் சுமை எங்களை மட்டுமே பாதிக்காது, பொதுமக்களையும் கண்டிப்பாக பாதிக்கும். நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×