search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
    X

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

    • ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும்.

    மதுரை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தையில் வளாகத்தில் இன்று பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 400 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் இன்று கிலோ 1,800 ரூபாயாக விலை உயர்ந்தது. இது தவிர பிச்சி பூக்கள் 800 ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 900 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்களின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன்களுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருந்த நிலையில் தற்போது அதன் வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இனி டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும். இதன் காரணமாக இதன் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×