search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை மூழ்கடித்த வெள்ளம்: தொல்பொருட்கள் உடைந்து சேதம்
    X

    ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை மூழ்கடித்த வெள்ளம்: தொல்பொருட்கள் உடைந்து சேதம்

    • பெருவெள்ளத்தில் ஆற்றங்கரையோர சாலைகள், கோவில்கள், அரசு அலுவலகங்களும் மூழ்கி பேரிழப்பை ஏற்படுத்தியது.
    • முதுமக்கள் தாழி தகவல் மையத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்து வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது. ஏராளமானவர்களின் வீடுகள், உடைமைகளை சேதப்படுத்தி நிர்க்கதியாக்கியது.

    வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரையும் பறித்து தீராத ரணத்தை ஏற்படுத்தியது. பெருவெள்ளத்தில் ஆற்றங்கரையோர சாலைகள், கோவில்கள், அரசு அலுவலகங்களும் மூழ்கி பேரிழப்பை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. அங்கு முதல்கட்டமாக அகழாய்வு நடைபெற்ற இடத்தில் கண்ணாடி இழை பதித்து மாதிரி சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் மேடான பரும்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பெருவெள்ளத்தின் கோரப்பிடியில் தப்பவில்லை. அங்குள்ள அகழாய்வு குழிகளை மூழ்கடித்த பெருவெள்ளம் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால தொல்பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியது.

    முதுமக்கள் தாழி தகவல் மையத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருங்காட்சியகத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தியது. தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் அருங்காட்சியகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அகழாய்வு குழியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், "சேதமடைந்த தொல்லியல் பொருட்களை முறையாக பாதுகாக்க வேண்டும். சைட் மியூசியத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்க வேண்டும். எதிர்காலத்தில் பேரிடரால் சேதமடையாத வகையில் அருங்காட்சியகத்தை நவீன முறையில் அமைக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×